எனது பேஸ்புக் பதிவின் தமிழ் பதிவை சில தோழர்கள் கேட்டிருந்தனர். அதனை வலைப்பூ பதிவாகவே இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி பதிவிடுகிறேன்.
பெங்களூருவில் நேற்று பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்கும் பதிவுகள் வெகு சிலரால் பரப்பப்பட்டு பகிரப்பட்டு வந்தன. அவர்களுக்கு கடை வாசலில் இவ்வளவு பேர் வரிசையில் நிற்பது பிரச்சனையில்லை. அதில் பெண்கள் நிற்பது தான் கண்களை உறுத்துகிறது.
பெங்களூரில் சட்டம் படிப்பதற்காக சென்றிருந்தபோதும், நண்பர்களை காண்பதற்காக சென்றிருந்தபோதும் அடிக்கடி பார்த்து வியந்த ஒரு விடயம், அலுவலகங்களின் வெளியே நின்று தம்மடிக்கும் பெண்கள். இதெல்லாம் பல காலமாக பெரு நகர கலாச்சாரத்தில் இருந்தாலும் நமது பிற்போக்கு பார்வைகளும், சிந்தனைகளும் அதை பார்த்ததுமே ஆச்சரியத்திற்கும் தீர்ப்புகளுக்குமே கொண்டு செல்கின்றன.
'சமூகச்சீரழிவு' என்பது பெண்களை மட்டுமே சார்ந்தது என்று செல்லுமிடம்மெங்கும் மறைமுகமாக நிறுவுவது பிற்போக்குவாதிகளின் Agenda by birth. அவர்களுக்கு கலாச்சாரம் என்பது பெண்கள் மூலமாகவே அளவிடப்படும். வேட்டியிலிருந்து ஜீன்சுகளுக்கு மாறியது ஆண்களுக்கு கலாச்சார முன்னேற்றம். பெண்கள் அணியும்போது மட்டும் அது அல்ட்ரா மாடர்ன் முதல் கலாச்சார சீரழிவு வரையறைக்குள் தான் வரும். அதனுடன் இயைந்து அவரின் நடத்தையும் கேள்விக்குள்ளாக்கப்படும். பிரபஞ்சனின் 'மரி என்கிற ஆட்டுக்குட்டி' அவசியம் படிக்கப்பட வேண்டிய ஒன்று.
பெங்களூரில் பெண்கள் மதுக்கடை வாசலில் நின்றதை 'வைரல்' ஆக்கிய இந்த கடைந்தெடுத்த பழைய பஞ்சாங்கங்களுக்கு பெண்கள் சங்க காலங்கள் முதலே மது அருந்துவார்கள் என்பது இதுவரை தெரியாமல் இருந்திருக்கிறது. மது அருந்துவது Injurious to health, குடி குடியைக் கெடுக்கும் என்பதைத் தாண்டி அது எந்த பாலினத்தையும் சாராதது. இருவருக்குமே பொதுவானது. நான் ஒழுக்கமாக இருக்கிறேன் என்பதால் அடுத்தவரை கேள்வி கேட்கிறேன் என்பது நல்லொழுக்கத்திமிர். ஆனால் அதுவும் பெண்களை நோக்கித்தான் முதலில் பாயும். நீ குடிப்பது உடல் நலத்திற்கு கேடு. அதுவொரு நோய். ஆனால், குடிப்பது Freedom of Choice. உன் தனிப்பட்ட விருப்பம். அது பெண்ணெனின் ஒழுக்கம் சார்ந்த சிக்கல். நடத்தை சீராய்வு செய்யப்பட்டு, அதன் சமூக, கலாச்சார பாதிப்புகள் அளவிடப்படும்.
பெங்களூர் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பெண்களிருக்கிறார்கள். அவர்களில் சுதந்திரம் விதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த விருப்பின்படி வாழ்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாத பிற்போக்கு மாரல் போலீசுகள் இச்சிற்றின்பங்கள் மூலம் பகடி செய்து மகிழ்கிறார்கள். சமூகத்தில் விளம்புநிலையிலிருக்கும், கடினமாக உழைக்கும் குறிப்பிட்டளவு பெண்களும் மது அருந்துவார்கள். பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டிருப்பதாலும், ஏற்கனவே ஆண்களால் சமூக நிலையில் அழுத்தப்பட்டிருப்பதாலும் அவர்கள் மீது இந்த குரூப்களுக்கு இரக்கம் உண்டு. ஆனால், மெத்த படித்து தங்கள் வாழ்க்கையில் சுயமாய் முடிவுகளை எடுக்கும்போது அப்பெண்களை சமமாக பார்க்க முடியாமல் இவர்களின் இயல்பான ஈகோ சுரண்டுகிறது. அதோடு இதையெல்லாம் இன்றும் புரியாமல், நாகரீகம் புரியாமலிருக்கும் ஓல்டு ஸ்கூல்களோ எது நடந்தாலும் வாயை பிளக்கிறார்கள்.
அடுத்த ஜென்மத்திலாவது Co-Ed School, College la படித்து பாலின சமத்துவத்தை புரிந்து வளர வாழ்த்துகள் !!!


Comments
Post a Comment