'என்ன பிரதர் எப்படியிருக்கீங்க? கொரோனாலாம் நலமா?'
பிரதர் ஜோஸ்பியிடமிருந்து கால்.
'நல்லாருக்கேன் பிரதர். அங்க எப்படி?'
'எல்லாம் நல்லாருக்கோம்' என்று சுற்றங்களை, கொரோனா நிலவரங்களை விசாரித்துவிட்டு அப்படியே வரும்போது ஆன் த வேயில் நினைவுக்கு வந்தார் தாஸ் மாமா. அவரொரு இங்கிலீஷ் டீச்சர்.
'ஆமா மாமா என்ன பண்றார்? என்ன ஆனார்?' , நான்.
'அவரு ஊருக்கு போயிருப்பார் இந்நேரம்?'
'எதே இந்த நேரத்திலியா?'
'ஆமாண்டா. அவரு சுத்தி வர, பஞ்சாயத்து பண்ணிட்டு திரிய ஊரு பக்கம் தான் சரி வரும்'
'பெரிய மைனரு'
'அவரு ஜமீன்டா. உனக்கு தெரியாதா அது?'
'இது எப்ப ப்ரொமோஷன்?'
'அவரு வாத்தியார், ஏதாவது பஞ்சாயத்து நடக்கிறப்ப இங்கிலீஸ்ல வேற கொஞ்சம் பேசுறதால அவர ஜமீன் ஆக்கியாச்சு. உங்க சின்ன மாமன மைனர் ஆக்கியாச்சு'
'கிராமத்துல இங்கிலீசெல்லாம் எதுக்கு? அவர் காலம் போன பின்ன, இருக்கிற அந்த ஒரேயொரு, யாருமே வராத வேப்பமரத்து பஸ் ஸ்டாப் பக்கத்துல அவர் சிலையை நீங்கள் வைப்பீர்கள் என்ற நம்பிக்கைதான் காரணம். நீங்கள் வைப்பீர்களா? சொல்லுங்கள் நீங்கள் வைப்பீர்களா?'
'அதுக்கு முன்ன அவர் நிலத்தை லே அவுட் போட்டு நகரெல்லாம் போட்டிருக்கார். ஊருக்கு போனப்ப பார்த்தேன். நகருக்கு என்ன பேரு சொல்லு பார்ப்போம்?'
' அவங்க அப்பார் பெயர் வச்சிருப்பார்?'
'இல்ல'
'அவங்க மாமனார் பிரசிடெண்ட் தான? அவரு பெயர்?'
'இல்ல. தாஸ் நகர்!'
'பரவால்லியே பெயரை காலம் முழுக்க நிலை நிறுத்திட்டாரே'
'அதோட விட்டாரா அவரு?'
'வேற'
'உங்க மாமன் ஃபார்ம் ஹவுஸ் கட்டியிருக்காரு'
'எதே.... அதிருக்கட்டும் சந்தடி சாக்குல உன் மாமன என் மாமாவா கன்வர்ட் பண்ணாத சூரகாண்டாயிடுவேன் ஆமா'
'அத விடுடா, அந்த ஃபார்ம் ஹவுஸ் எப்படின்னா, இரெண்டு ஏக்கர் நிலம் வாங்கி ....'
'அடடா....'
'சுத்தி வேலி போட்டு, விவசாயம் நடக்க, நடுவுல ஜம்முன்னு கட்டிவிட்டிருக்கார்....'
'நடுவுல சில்லுன்னு இருக்குமே. அடுத்த முறை ஊருக்கு வரப்ப அங்கதான் தங்கணும். சொல்லி வை'
'ஆமா ஆமா. இரண்டு மாடி வேற'
'இரு. நிப்பாட்டு. வயல்ல நடுவுல மோட்டார் ரூம் தான இருக்கும். இவரு எங்கருந்து ஃபார்ம் ஹவுஸ் கட்டிருக்கார்?'
'அந்த மோட்டார் ரூமத்தான் சொல்லிட்டிருக்கேன். கீழ ஒரு மோட்டார் ரூம், மேல டூல்ஸ் ரூம். நீ வந்தா அங்க தான் தங்கணும்'
'கொஞ்சம் பெருசாவே கட்டியிருக்கலாம். சரி மொட்டை மாடி இருக்குல்ல?'
'மீதியிருக்க ஒன்றரை ஏக்கர்ல கயித்து கட்டில் போட்டு படுத்துக்க'
'இரெண்டு ஏக்கர் நிலம் வாங்கினவரு என்ன சிக்கனமா ஃபார்ம் ஹவுஸ் கட்டியிருக்காரு. பாராட்டுவியா....'
'அட அவரு சொந்தக்காரனுங்க வந்து தங்கிடக்கூடாதுன்னு தான் படுத்தா கால் இடிக்கிற மாதிரி சின்னதா கட்டி விட்டிருக்கார்'
'பின்ன, என்னவொரு
விவரமான வாத்தியார்'
'என்னமா ப்ளான் பண்ணி கட்டியிருக்காரு. பாராட்டுவியா ...'
'ஆமா, வெள்ளை மாளிகைய உங்கக்கிட்ட கொடுத்தாலுமே அதை இடிச்சு உங்க தாத்தாரு வீடு மாதிரி முன்னாடி தாழ்வாரம், கூடமெல்லாம் வச்சு தான கட்டுவீங்க. ஜெயங்கொண்டத்துக்காரன் அவ்வளவு விவரமானவங்க இல்ல'
'ஆமா, வெள்ளை மாளிகைய கட்டிட்டு வாசல்ல போய் படுத்துக்குவோம்'
'ஏன் செக்யூரிட்டி வேலைக்கு போறீங்களா? நீங்க மாளிகைக்கு ஓனருய்யா'
'அட வாசல்ல படுத்தாதான மாமா தான் ஓனருன்னு எல்லோருக்கும் தெரியும். உள்ள போய் படுத்தா எப்படி தெரியும்?'
'வாவ் வேற லெவல் நீங்கல்லாம்'
'அமெரிக்கா டிரம்பையே மிரட்டி வச்சிருக்கோம். அந்த வெள்ளை மாளிகைய சீக்கிரம் வாங்கிடு'
'விட்டா ராஜேந்திர சோழன் கிட்டயே ஏன் எங்க இடத்தில கோவில் கட்டினன்னு சண்டைக்கு போவீங்க நீங்கல்லாம்'
'அவரெல்லாம் எங்களுக்கு குறுநில மன்னர். நம்ப ரேஞ்செல்லாம் நெப்போலியன், அலெக்ஸாண்டர் போன்ற ஆளுங்க கிட்டதான்'
'ஆஹான். ராஜேந்திர சோழன் குறுநில மன்னரா?'
'ஆமா'
'அப்ப அந்த பத்திரம்?'
'நம்ம வின்சென்ட் வீட்டுல பத்திரமா இருக்கு'
'சரி அந்த கோவில் பத்திரத்தை பத்திரமா வை, அடுத்த மாசம் ஊருக்கு வரப்ப அடமானம் வச்சு உன் கொல்லைக்கு மருந்தடிக்க லோன் வாங்கணும்'
'சரி நான் அடுத்த வருஷம் பேசறேன்'
*டொக்*
Comments
Post a Comment