Anjaam Pathiraa
Malayalam
2020
Thriller
Anjaam Pathiraa, அஞ்சாம் பாதிரா, (The fifth midnight - ஐந்தாம் நள்ளிரவு)
வழக்கமாக கொலை வழக்குகளை காவல்துறையினர் தான் புலனாய்வு செய்வார்கள். ஆனால் இங்கு தொடர்ந்து கொல்லப்படுவதே காவல்துறையினர் தான் என்பதால் பரபரப்பாகிறது ஒட்டு மொத்த காவல்துறையும். அவர்களை கொடூரமாக கொலை செய்வதோடு, கொலை நடந்த இடத்தில் ஒரு சிலையையும் விட்டுச்செல்கிறான் கொலைக்காரன். அது ஏன்? அவனை கண்டுப்பிடித்தார்களா? கொலைகள் தடுக்கப்பட்டதா? என்பது தான் படத்தின் விறுவிறுப்பான கதை.
படத்தின் கதாநாயகன் குஞ்சாக்கோ போபன் ஒரு கிரிமினாலிஜிஸ்ட். காவல்துறையில் திடீரென்று நடக்கும் ஒவ்வொரு கொலைகளுக்குப் பின்னாலிருக்கும் மர்ம முடிச்சுகளை கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்கிறார். மிக அலட்டலில்லாத நடிப்பு. ஒரு சிறு க்ளூ கூட இல்லாத இடத்தில் தேடலைத் துவக்கி கதையின் பரபரப்பில் தன் நடிப்பை பதிக்கிறார். தமிழ் டாக்கீஸ் புளூ சட்டை அண்ணாச்சி சொல்வது போல ஹீரோவுக்கு ஈடாக, அதுக்கும் மேலாக வலுவான கதாபாத்திரமாக இருக்கிறார் வில்லன். அதனாலேயே படம் சிறப்பாக இருக்கிறது. ஒருவரை கொலை செய்து புலனாய்வு செய்யும் கதாநாயகன் வீட்டிற்கே டெலிவரி செய்கிறார். மிரட்டல். கொலையாளி யார், அவன் பின்னணி என்ன என்றறிய வரும் இறுதிக்கட்ட காட்சிகள் மிகுந்த விறுவிறுப்பு. கிளைமாக்ஸ் வரை யாராலும் கொலையாளி யார் என்பதை ஒரு சதவிகிதம் கூட யூகிக்க முடியாது. அது தான் படம். படத்தின் ஒன்றிரண்டு விடயங்கள் மட்டும் மிஷ்கினின் சைக்கோவுடன் சற்றே சம்பந்தப்படுகிறது. அவை கதைக்கு முக்கியமானவை இல்லை.
மிக சிறப்பான திரைக்கதை. படம் முழுக்க காவல்துறை தொடர்பானது என்பதால் அக்காட்சிகளை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். பின்னணி இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு ஆவ்சம். விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத நல்ல ஒரு அருமையான த்ரில்லர். இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மிதுன் மானுவல் தாமஸ். இப்படத்தை மீண்டும் பார்த்து இன்னும் எழுதலாம். நல்ல டீடெயில்கள்.
இப்படத்தை நீண்ட காலமாக பரிந்துரை செய்துக்கொண்டேயிருந்து, இறுதியில் தலையில் கொட்டி பார்க்கச்செய்த நண்பி தாருவிற்கு நன்றி.
P.S. :
படம் குறித்து நிறைய விவரித்தால் அப்படம் பார்க்கும் உணர்வு குன்றிவிடும் என்பதாலேயே அளவான பதிவுகள். தேர்வு செய்து நான் பார்க்கும், எனது சிற்றறிவுக்குப் புரிந்த படங்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன். படத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள், எப்படி கதையோடு ஒன்றுகிறீர்கள், அது என்ன தாக்கத்தை மனதில் ஏற்படுகிறது என்பது படம் பார்க்கும் உங்களுக்கே உரித்தானது. அதனாலேயே நான் இரசித்த விடயங்களைக் கூட கதையாக, கதாபாத்திரங்களாக பதியாமலிருக்கிறேன். அவர்கள் மீது எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி படத்தைக் காணுங்கள். உங்கள் மனக்கண்களில் அவர்கள் தோன்றும் விதத்தை இரசியுங்கள். மற்றபடி பக்கம் பக்கமாக விவரித்து எழுதப்படும் கட்டுரைகள் மறைமுக Spoilerகளாக மாறும் வாய்ப்புள்ளது. அதை பார்வையாளனிடமே விட்டுவிடுங்கள் என்பதே என் கருத்தாக இருக்கிறது.
அன்புடன்,
ஜே
Comments
Post a Comment