Skip to main content

நல்லா இருந்த நாடும், நாலு பசு மாடும் ! - ஜே

நான் பாட்டுக்கு செவனேன்னு தான்டா இருந்தேன்னு ஒரு காட்சியில் வடிவேல் சொல்லுவார். அப்படித்தான் இருக்கு நம் நாட்டின் மக்கள் நிலைமையும். ஏதாவது ஒரு காரணம் காட்டி நம்மை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கும் இவர்களின் சூட்சமம் தான் புரியவில்லை.
ஜல்லிக்கட்டு, demonetization, நியூட்ரினோ, hydrocarbon துவங்கி தற்போது பசு மாடு வரை இவ்வளவு நாளாக இல்லாத பிரிவினைவாதம் - வன்முறை - படுகொலைகள் நவீன காலத்திலும் நடைபெறுவது உங்களுக்கு புரிகிறதா? இதெல்லாம் ஏன் நடைபெறுகின்றன, யாரால் நடைபெறுகின்றன என்று என்றாவது சிந்தித்ததுண்டா ??

ஆயிரமாயிரம் கேள்விகள்...

தெலுங்கு படங்களில் கொடூரமான வில்லன்களை காட்ட கிராமப்புறத்திலிருப்பது போல களம் அமைப்பர். படிப்பறிவு இல்லாத இடங்களில் இவ்வளவு அக்கிரமங்கள் நடப்பது போல காட்டப்பட்டாலும், தற்காலத்தில் இவையெல்லாம் நம்மை சுற்றி நடப்பது போலவே தோன்றுகின்றன. ஏன் ?


என் சக தோழன் கிறித்தவனோ இசுலாமியனோ இந்துவோ, ஆனால், அவனுக்கு நமக்குமான மத வேறுபாட்டை பெரிதுபடுத்திக் காட்ட என்னென்னமோ சித்து விளையாட்டுகளை நடத்திப் பார்க்கின்றனரே. ஏன்?

ஒருவரின் மனதில் அவனுக்கான மத - சாதிய அடையாளத்தை ஆழமாக நிறுவிவிட்டால், அவன் சமூகத்தில் எங்கு சென்றாலும் எப்பேற்பட்ட குழுவிலும் தனித்து தெரிவானே அல்லது தனித்து தெரியவேண்டுமென விரும்புவான். தனித்து இயங்குவான். சமூகத்தில் அந்தந்த அடையாளத்தோடு தனித்தனி குழுக்கள் உருவாகும். இயங்கும். அதற்கான அடையாளமாக மதத்தை களமாக அமைக்கின்றனரா ??
அதனால் ஏற்படும் விளைவுகள் இவர்களுக்குத் தெரியுமா? தெரிந்து ஒரு மனிதனால் எப்படி பிரிவினையை ஊக்கப்படுத்த முடியும்? அது Racism எனப்படும் இன வெறியால் மட்டுமே முடியும். அதைத்தான் வெவ்வேறு வழிகளில் சலவை செய்யப்பட்ட முறையில் நஞ்சாக செலுத்தப் பார்க்கின்றனர்.

நடுவணரசில் (மத்திய அரசு) என்ன கொள்கையோடு ஆட்சியைப் பிடித்தனர், அவர்களுக்கு என்ன ஆட்சிக் கொள்கை என்பதையெல்லாம் விட்டுவிடுவோம். அது அரசியல். அரசியல் பேசக்கூடாதென்று பார்த்தாலும் வீட்டைத் தாண்டி அரசியல் இல்லாமல் எதையுமே பேச முடியாது என்பது தான் நிதர்சனம்.

Unity in Diversity என்று உலகெங்கிலும் பெருமையாகக் கொண்டாடப்படும் இந்தியாவில் மத நல்லிணக்கம் அவசியமானதாகக் கருதப்படும் நிலையில் இது வரையில் உருவாக்கப்பட்டு வந்த நல்லிணக்கத்தை சிதறடிக்க ஏதோ ஒரு ஆற்றல் முயல்வது நமக்கு உரைக்கிறதா ???
வேற்றுமையில் ஒற்றுமையை காணும் வேளையில்,
ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி பிரிவினைவாதம் நம்மிடம் மூட்டி விடப்படுகிறதே. அதன் நுட்பம் என்ன ?? இதைச் செய்பவர்கள் யார் ??
இலுமினாட்டிகளா ? மிஷினரிகளா ? பாகிஸ்தான் உளவுத்துறையினரா ?



பசு மாட்டை நாங்கள் கடவுளாக பார்க்கிறோம் என்று புது அரசியல் பேசிக்கொண்டு, மாட்டுக்கறி உண்பவர்களை, வணிகத்திற்காக கொண்டு செல்பவர்களை கொடூரமாகத் தாக்கியும், கொன்றும் வரும் இவர்கள், இத்தனை நாளாக தோல் உற்பத்தி தொழிற்சாலைகளையும், மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்களையும் காணாமல் இருப்பது வியப்பு. நான் வியக்கேன். இப்போதான் எங்கள் ஆட்சி அமைந்திருக்கிறது இனிமேல் எங்கள் தலைவர் செய்வார் என்றால், இது நாள் வரை உங்கள் கட்சி ஆட்சியில் அமைந்தபோது இது குறித்து என்ன செய்தீர்கள் ? இதற்காக மட்டும் தான் உங்கள் ஆட்சியா ? ஆட்சி அமையாவிட்டால் இதையெல்லாம் தட்டி கேட்க மாட்டீர்களா ? என்பதற்கும் சிந்தித்து பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.
அதை விடுங்க, சாலையில் திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்திருக்கிறீர்களா? இல்ல ஏழை விவசாயியின் மாட்டுக்கு தீவனம் வைத்திருக்கிறீர்களா? கோமாதா குடிக்கத் தண்ணியாவது வச்சிருக்கிறீர்களா?
அட, அதுக்கு கை காசை போட்டு கோ சாலைகளாவது அமைத்திருக்கிறீர்களா? ம்ம்ம்கும்.... பட்... அதை சாப்பிடக்கூடாது.



இதற்கு மேற்படி இதே பயங்கரவாத கும்பலின் இன்னொரு வெர்சன் தான் இந்த 'VEGAN' கும்பல். அதாவது சைவ பின்னணியிலிருந்து வராமல், திடீர் சைவப்பட்சணிகளாக மாறிவிட்டு அசைவம் சாப்பிடுபவர்களை கேவலமாகப் பார்க்கும் கும்பல். சாதியில் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது என்று பேசி வந்தால் இந்தப் பக்கம் உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் ஒரு கேவலமான ஆனால் பயங்கரமான ஒரு பிரிவினையை உருவாக்கி வருகின்றனர். ஏன் தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இது ஹிட்லரின் நாசிசக் கொள்கையை விட கொடூரமானது என்றால் நம்பமுடிகிறதா ??.
மாமிசத்திலும் உயர்வு தாழ்வு வேறுபாடு உள்ளது. ஆடு, கோழி மீனை விட மாட்டு மாமிசம் தாழ்ந்ததாகக் கருதப்பெறுகிறது. செத்த மாட்டு மாமிசம் மிகவும் தாழ்ந்ததாகக் கருதப் பெறுகிறது. மாட்டு மாமிசம் போலவே பன்றி மாமிசமும் தாழ்ந்ததாகக் கருதப்பெறுகிறது. எலி, நண்டு, நத்தை மாமிசம் மற்ற எல்லாவற்றையும் விடத் தாழ்ந்ததாகக் கருதப்பெறுகிறது. மாமிசம் உண்போரில் இத்தகைய வேறுபாடுகள் உயர்வு தாழ்வுகள் உள்ளன. இன்ன சாதியார் இன்ன மாமிசம் உண்பர் என்பது போன்ற சில பழக்கவழக்கங்களும் உள்ளன. இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
- சாதியும் மதமும் நூலிலிருந்து, ஊரன் அடிகள் (தலைவர், சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்)
சைவ பிராணிகளே, சைவ உணவு உண்பது நல்ல பழக்கமாக இருந்தாலும் இருக்காவிட்டாலும், தான் சாப்பிடும் உணவு தான் சிறந்தது, ஒழுக்கமானது, இதை சாப்பிடுபவர்களே ஒழுக்கமானவர்கள் என்று எவர் பாகுபடுத்தி பேசுகிறாரோ அதற்குப் பெயர் 'உயர்நிலை' அல்ல. அதன் பெயர் 'நல்லொழுக்கத் திமிர்'. விளங்கிட்டோ ?
ஏனென்றால், எந்த உணவு உண்ண வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை மட்டுமல்ல, அடிப்படை உரிமை.

மாட்டை வணங்குவதாகக் கூறிக்கொண்டு அரசியல் செய்யும் பயங்கரவாதிகளும் சரி, சைவ ஒழுக்கவாதிகளும் சரி, 'பாக்கெட் பால்' குடிப்பார்களா? அது எப்படி கறக்கப்படுகிறது தெரியுமா ? தெரிந்து எப்படி குடிக்கின்றனர்? அது அவர்கள் கொள்கை (!) க்கு எதிரானது இல்லையா?
பால் சைவம் என்று கூறியது யார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இயந்திரங்கள் துன்புறுத்தாமல் நாட்டு மாட்டின் பாலை கறந்து இவர்கள் பயன்படுத்த வேண்டாமா ? ஜெர்ஸி மாட்டிலிருந்து மட்டும் கறக்கலாமா என்று கேட்காதீர்கள், இவர்களுக்கு கோமாதா நாட்டு மாடா ஜெர்சி மாடா என்று கூட தெரியாது.

எளிய பால் கறக்கும் இயந்திரம்

மதவாத அமைப்புகளின் தொண்டர்கள் அனைவரும் 'இந்துக்கள்' என்ற முழக்கத்தை வெகு நாட்களாக கூறி வந்தாலும் தற்காலத்தில் வலுப் பெற்றிருக்கிறது. அதற்கு அவர்கள் முன் வைக்கும் கருத்துகள் :

1) இந்தியா இந்து நாடு. இந்தியாவில் பிறக்கிறவர்கள் இந்துக்கள்.
(இதை என்னிடம் கூறியவர் ஒரு மெத்த படித்த பெண்மணி!!!!!!)
2) இந்தியாவில் இந்திய கலாச்சாரம் மாற்று மதத்தினரால் அழிக்கப்படுகிறது. கலாச்சார மீட்டெடுப்பு வேண்டும். அதற்கு தூய்மைவாதம் தேவை. (இதை வெள்ளியங்கிரி சாமியார் செய்வார்!)
3) இந்தியா இந்து நாடு. இந்தியாவை ஆள வந்த மொகலாயர்களும், கிறித்துவர்களும் அதை சுரண்டி பாரத கலாச்சாரத்தை அழித்துவிட்டனர். அதை மீட்க வேண்டும்.
4) சிறுபான்மை மதத்தவர் இந்துக்களை மதம் மாற்ற முயலுகின்றனர். நமது கலாச்சாரத்தை அழிக்கின்றனர். இந்துக்களை சிறுபான்மையாக்கிவிட்டனர் (!).
5) இந்தியா எனும் நாடு இந்துக்களுக்கானது. இந்துக்களாக அனைவரும் வாழ வேண்டும். தாய் மதம் திரும்ப வேண்டும்
6) சிறுபான்மையினரின் நாடுகளில் இந்துக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இந்து மதம் புறக்கணிக்கப்படுகிறது. இந்தியாவில் ஏன் நாம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் ?
7) இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்க வேண்டும்.



இதை சொல்பவர்கள் யாரும் காட்டுமிராண்டிகளோ பல தலைமுறைகளாக படிப்பறிவற்றவர்களோ அல்ல. அனைவரும் மெத்த படித்தவர்களே. இவர்கள் தம் மதத்தின் பெருமையையோ, தேவையையோ பேசாமல், மாற்று மதங்களின் மீது குற்றச்சாட்டுகளையும் வெறுப்புக்களையும் வெகுவாக வளர்த்து அதன் மூலம் தங்கள் கோட்பாடுகளை வெற்றி பெற வைக்க முயலும் ஆற்றாண்மைக்காரர்கள். இவர்களால் இவர்கள் கருத்துக்கள் உடனடியாக விதைக்கப்பட முடியாமல் போனதால், மக்களிடையே எளிதாக எழக்கூடிய வன்ம உணர்வினை மாற்று மதத்துக்காரர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தையே அழித்துவிட்டது போலவும், இந்தியாவே அவர்களிடம் சிக்குண்டுள்ளது போலவும், இந்திய கலாச்சாரத்தையே அவர்கள் சிதைத்தது போலவும் மூளைச் சலவை செய்து தூண்டி தங்கள் பக்கம் இழுத்துக் கொள்கின்றனர் மற்றும் பண வழங்கிகளாக மாற்றிக்கொள்கின்றனர். கடவுள்களை, மதத்தைக் காரணம் காட்டி அவர்கள் மீதான வன்முறையில் ஈடுபட்டு அந்த வன்மத்தை தீர்த்துக்கொள்கின்றனர். மன அளவில் மென்மேலும் சுய இன்பம் காண்கின்றனர். சாமான்ய மக்களும் இவர்களின் பரப்புரையில் வீழ்வதுதான் வேதனை. உள்நாட்டுக்காரர்கள் இப்படியென்றால் வெளிநாடு போய் வாழும், அதிலும் மேற்கத்திய நாடுகளில் மிகப்பெரிய இந்துக் கோவில்கள் கொண்டுள்ள நாடுகளில் வாழ்வோரும் இதையே சொல்வது செம நகைச்சுவை. அதிலும் வளைகுடா நாடுகளில் அரபிக்காரனிடம் பணிப்புரிந்துக்கொண்டு இந்தியாவின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசுவதும், தூய்மைவாதம் பேசுவதும் மிகச்சிறந்த நகை முரண். வாழ்வாதாரத்திற்காக பிற மத நாடுகளில் போய் அமர்ந்துக்கொண்டு தன் தாய் நாட்டில் அதே மதத்தினரை எதிர்க்கும் இவர்கள், அவர்கள் இருக்கும் நாட்டில் அந்த மதத்தை எதிர்த்து பேச முடியுமா? இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிட்டால் என்ன கதியோ அதை விட அதோ கதி தான் அவர்களுக்கு. மிஷினரிகள் 'பாரத' கலாச்சாரத்தை அழித்தார்கள் என்று கூறுபவர்கள் ஏன் மேற்கத்திய நாடுகளில் பணிபுரிகிறார்கள் என்றோ, மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள் என்றோ நான் அடிப்படிவாத கருத்துகளை கூறப்போவதில்லை. இந்த கொள்கை வீரர்கள் ஏன் அடித்துப்பிடித்து உள்நாட்டிலிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். ஆங்கிலம் பேசுவதும், ஆங்கில உடையணிவதும், இசுலாமிய நாடுகளில் பணிபுரிவதும், இங்கு இசுலாமிய உணவகங்களில் சாப்பிடுவதும் தீட்டல்லவா?
அடிப்படைவாதத்தின் ஆணிவேரே இது தான் என்கிறீர்களா?



கொஞ்சம் மெத்த படித்தவர்களோ சமூக ஊடகங்களில் வந்து இந்தியாவின் கலாச்சாரம் மிஷினரிகளால் அழிக்கப்பட்டது என்று குரல் கொடுக்கின்றனர். முகலாய படையெடுப்பினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என்று ஆவேசப்படுகின்றனர். ஆரியப் படையெடுப்பை மென்மையாக ஆரியர்களின் வருகை என்கின்றனர். இந்தியா இந்தியர்களுக்கே என்பதை இந்தியா இந்துக்களுக்கே என்கின்றனர். இவர்கள் கூறுவது எந்த இந்தியா என்பது தான் புரியவில்லை.

முதலில், இந்தியா எப்படி ஆனது ? இவர்கள் கூறுவது போல வெள்ளைக்காரர்கள் தான் அனைத்தையும் அழித்தனரா ?

எளிமையாகக் கூறப்போனால் பண்டைய கிரேக்கர்களாலும் அரேபியர்களாலும் சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்தவர்களையே குறிக்கப்பட்டு, பின்னாளில் பாரசீக சொல்லான indio - இந்து என்பதிலிருந்து உருவானது. இதெல்லாம் சிந்து நதியின் அடிப்படையில் உருவானதே தவிர மதத்தால் - கலாச்சாரத்தால் உருவாகவில்லை.
இவர்கள் இந்தியா என்பதை எதை வைத்து கூறுகிறார்கள் என்று புரியவில்லை. அவர்களுக்கே புரியவில்லை என்று நினைக்கிறேன்.
தற்காலத்தில் இந்திய யூனியன் எனப்படும் நம் நாடு பன்மொழி தேசியங்களை ஒருங்கே கொண்டுள்ள ஒரு மிகப்பெரும் நாடு. ஒவ்வொரு மொழி பேசும் மாநிலத்திற்கும் அதற்கேயுரிய பண்பாடும், கலாச்சாரமும், மரபும், இன - மொழி தேசியம் பேசக்கூடிய உரிமையும் உண்டு. இதே இந்தியா வங்காளத்தை எப்படி தனி நாடாக்கியது என்பது வரலாறு. இவர்கள் இந்தியா என்றல்ல இந்துஸ்தானம் என்று என்று மேற்கோள் காட்டும் மௌரிய பேரரசு கி.மு.250 இல் வடமேற்கில் பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தானின் இந்துகூஷ் மலை வரை நீண்டிருந்தது. அக்காலத்தில் உலகின் மிகப்பெரிய பேரரசாக இருந்த மௌரியர்கள் கால்பதிக்காத இடம், தெற்கில் அன்றைய மூவேந்தர்கள் மற்றும் அதியமான் வழியினரின் நம் தமிழ்நாடும், கேரளபுத்திரர்களின் கேரளமும் மட்டுமே. (அதியமான் வழியினர் குதிரையேற்றத்தில் வல்லவர்கள். இவர்களின் ஆளுகை தற்போதைய ஊட்டி - தர்மபுரி - ஆனைமலை இடையில் இருந்தது. இலங்கை குதிரைமலையிலும் இருந்ததாகக் குறிப்புகள் உண்டு.)
கிட்டத்தட்ட 135 ஆண்டுகள் பல பேரரசர்கள் ஆண்ட பேரரசு கூட தொட முடியாத இடத்தில் தமிழகம் இருந்துள்ளது. இனியும் இருக்கும்.



இது சுருக்கமான வரலாறு.

இனியும் இவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று போய் 'அகண்ட பாரதத்தை' கேட்டு அவர்களிடம் அடி வாங்க விரும்பாததால், அந்த வீரத்தை தங்கள் குறுகிய நிலத்தில் அந்த மதத்தினரைக் காட்டி இன்பம் காண்கின்றனர் என நினைக்கிறேன்.

உண்மையில் இந்துக்கள் என்பது இவர்கள் கூறும் இந்துக்களே அல்ல என்பது தான் உண்மை. இவர்கள் இந்துயிய பயங்கரவாதிகள். அவர்களோ கோவிலிலும் தங்கள் கடவுள்களை வழிபடும்போது மட்டுமே இந்து, கிறித்தவர், இசுலாமியன். சமூகத்தில் ஒரு மனிதன் அவ்வளவே. தமிழகத்தில் எனக்குத் தெரிந்து மத அடையாளங்களை எவருமே ஆர்வமாக வெளிக்காட்டிக்கொண்டதுமில்லை, மதப்பற்றாளர்கள் என்றாலும் அதுக் குறித்து வெளியே பேசியதுமில்லை. சில மதத்தினர் ஆர்வக்கோளாறில் செய்யும் செயல்கள் பெரிதுப்படுத்தப்பட்டு இவர்களைப் போன்ற நச்சுக் கும்பல்களால் பரப்பப்படுகின்றன.

மெய்நிலை என்னவென்றால்,
தங்கள் சுயநலனுக்காக, மதம், மதக் கலாச்சாரம், தேசிய பண்பாடு என்று பேசித் திரியும் இவர்களின் கருத்துகளிலும் பரப்புரைகளிலும் எள்ளளவும் உண்மையில்லை என்பதே. எளிய சாமான்ய மக்கள் என்றும் போல சாதி, மத பாகுபாடின்றி பழகிக்கொண்டுதான் இருக்கின்றனர். இனியும் அப்படி இவர்களின்றி பழகலாம். மத பிரிவினை பார்க்காமல் சமூகமாகக் கூடி வாழலாம். இது தென்னிந்தியாவில், குறிப்பாக, தமிழகத்தில் மட்டுமே பெரிய அளவில் சாத்தியமாகும். ஏனெனில் நம் மண் அப்படி.
ஆனால் இதெல்லாம் இந்த மண்ணுக்கு ஒவ்வாமல் போனதுதான் நமது ஆகச்சிறந்த எதிர்ப்பாற்றல். அது மட்டும் ஓசோன் படலம் போல் இல்லையென்றால் இந்நேரம் தமிழ்நாடு வட இந்தியாவை போல் சாதி-மத கலவரங்களில் சிதறிப்போயிருக்கும். அதனை மறைமுகமாகவோ நேரடியாகவோ உருவாக்கியதில் பெரியார் எனப்படும் ஈ.வே.ரா.வுக்கு பங்குள்ளது. அது ஒரு காரணம்.

(பெரியார் மீது விமர்சனங்கள் இன்றைய தேதியில் வைத்தாலும் இம்மண்ணின் மூன்றாம் மனிதர்கள் கூட வெகு சாதாரணமாக ஒரு குற்றச்சாட்டை வைத்துவிட முடியாத அளவுக்கு ஒரு மாற்றத்தை நிகழ்த்திவிட்டு போயிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், திராவிடம் - பெரியார் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், கடவுள் மறுப்பு - சாதி மறுப்பு - மூட நம்பிக்கை ஒழிப்பினால் ஏற்பட்ட Indirect Results ஏராளம். அதன் பலன்களைத் தான் இந்தத் தலைமுறையினராகிய நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். மேம்போக்காக பார்த்தாலும் 'சாதி பேரு சொல்ல முடியாது, கடவுள் இல்லை, சாதி இல்லை, அனைவரும் சமம்' போன்றவையெல்லாம் பொதுவில் இன்று செய்ய முடிகிறது. சாதாரண மக்களின் சிந்தனையுடனேயே கலந்து பயணிக்கிறது. பெரியாரியத்தை ஆதரிப்பது என்பது வேறு. கடவுள் மறுப்பு - முற்போக்கு சிந்தனை என்பது வேறு. அதற்காக பார்ப்பனிய ஒழிப்பு என்று உள் நுழைந்து பார்க்கத் தேவையில்லை. பெரியாரின் பணிகள் நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிந்தோ தெரியாமலோ சிலவற்றை நிகழ்த்திக்காட்டிருக்கின்றன. அதிலும் புதுவையில் கருப்பு சட்டை இயக்கங்கள் தான் எதிர்க்கட்சி என்றளவில் அவர்களின் சமூகப்பணி இருக்கிறது. இதில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் தாராளமாக என்னிடம் நேரடியாக உரையாடலாம்.)

தடுப்பாற்றலை விடுங்கள். சாதிய பாகுபாடு மிகுந்துள்ளதாக நாம் நம்பும் நம்மூர் கிராமங்களில் கூட என்ன மதம் - சாதி என்று பார்க்காமல் பழகுபவர்கள் நிறைய பேருள்ளனர். அதிலும் கிறித்தவர் வீட்டு கிறிஸ்துமஸ் இனிப்பு இந்து, இசுலாமியர் வீட்டுக்கு போகும், இசுலாமியர் வீட்டு நோன்பு கஞ்சி இந்து, கிறித்தவர் வீட்டுக்கு வரும், இந்துக்கள் வீட்டு தீபாவளி பலகாரம் எல்லார் வீட்டுக்கும் பேதமில்லாமல் போகும். புதுவையில் நோன்பு காலத்தில் தினம் மாலை இசுலாமியர் நண்பர்கள் நோன்பு கஞ்சிக்கு பெரிய போரே நடக்கும். வாளியில் கொடுத்தனுப்பினாலும் கழுவி வைத்தால் போல ரிடர்ன் கொடுப்போம். மத பண்டிகைகள் வந்தால் தான் அவரவர் என்ன மதம் என்றே தெரியும். அதும் அவர் கொண்டாடினால் மட்டுமே. இத்தனை காலமாக இவை இப்படியிருக்க எப்படி வந்தது இந்த பிரிவினை முழக்கம் ?


முன்பாவது கட்சி பாகுபாடு என்று பேருக்கு இருந்தது. திமுக - அதிமுக சண்டை போட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் இந்த தேசிய கட்சிகள் உள்நுழைந்ததிலிருந்து ஏதோ ஒரு ஆழமான தாக்கம் சமூகத்தின் உள்கட்டமைப்பு வரை ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. இந்தத் தாக்கம் சமூக வளர்ச்சியிலில்லை. இந்த மண்ணுக்கு ஒவ்வாத பிரிவினை பேதம் பார்ப்பதிலிருந்து தான் துவங்குகிறது. தனித் தனி அடையாளங்களை ஊக்குவித்து மதம் சார்ந்து குழு சமத்துவம் பேணுவதை ஊக்குவிக்கிறது ஒரு மறைமுக ஆற்றல். அதற்கு ஒரு பொருளற்ற கருத்தியலும் வலுவான ஆள் பலமும் உண்டு என்பதை உணர முடிகிறதா?. காஷ்மீரை பிரிப்பது பற்றி பேசுவது பிரிவினைவாதம் என்றால் அனைத்து இந்திய மக்களிடையே இந்துயிய அடையாளங்களை திணித்து, சிறுபான்மை மதத்தினரிடம் 'நீயும் இந்துதான். இக்காலத்தில் வேறு மதத்திலிருக்கிறாய்' என்று மறைமுகமாக மிரட்டுவதும் பிரிவினைவாதம் தான்.

இறுதியாக,
உணவாலும், மதத்தாலும் யார் உங்களைத் தூண்டி உங்களுக்குள்ளேயே பிரிவினையுணர்வை விதைக்கின்றாரோ அவரே நம் நாட்டின் தேச விரோதி எனக் கொள்க !

நம் நாட்டு மக்களின் உணவு பழக்க வரைபடம்

போனா போகுது,
சிந்திக்க இலாயக்கற்ற இவர்களுக்கு சிறு தீர்வு சொல்லுவோம்.
தேசப்பற்றைக் காட்ட பாகிஸ்தான் எனும் எதிரி மனப்பான்மை எப்படி இந்த கும்பல்களுக்கு தேவையோ அப்படியே இவர்கள் வண்டி ஓட பிற மத விரோத மனப்பான்மை தேவை. அப்படி விரோத மனப்பான்மை இருந்தால் மட்டும் போதாது சாரே, தனிச்சிறப்பு வேண்டும். அவர்களை சாராது வாழ்தல் வேண்டும். Make in India என்று சொன்னால் பத்தாது, உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும். உள்நாட்டு தயாரிப்பாளர்களின் வளர்ச்சிக்கு அரசு உதவ வேண்டும். உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் பெருமளவில் தொடங்க ஆதரவளிக்க வேண்டும். அதை விட உள்நாட்டு பொருட்களின் பயன்பாடு முக்கியம்.
தயாரா ?
உங்களால் முடியுமா ?
Unilever, Peter England எல்லாம் என்ன உற்பத்தி என்பதே அந்த கும்பலுக்கு இன்னும் தெரியாது. இந்த அடிப்படை அறிவுகளெல்லாம் வேண்டும்.
இனக்கட்டமைப்பு என்பது பொருளாதார கட்டமைப்பை பெருமளவில் சார்ந்திருக்கிறது. எனவே பொருளாதாரத்தை Demonetization போன்று முட்டா பீசாக வளர்க்காமல் நல்ல திறமையான பொருளாதார மேதைகளை உயர் பதவிகளில் அமர்த்தி அல்லது உருவாக்கி திறனாய்வு செய்தல் வேண்டும்.
உலக அரங்கில் சாமியாரை வைத்து வெள்ளைக்காரர்களை மதம் மாற்றி மயக்கி சீன் போடுவதோடு நிற்காமல், மாட்டுக்கறிக்காக கொலை செய்வது, இசுலாமிய பெண்களை கற்பழிப்பது, சாதிக்காக கொலை செய்வது என்பதெல்லாம் தடை செய்து உங்கள் மதத்தை வன்முறையற்ற அமைதியான மெய்யியல் வழியாக நிலைநிறுத்த வேண்டும்.
அதற்கும் மேலாக உங்கள் மதத்தில் அனைவரும் சமம், சாதியே இல்லை, சாதிக்கு தடை, சாதியப் பிரிவினை பேசினால் தண்டனை, அமைப்புகளுக்கு தடை என்றெல்லாம் அறிவிப்பு செய்து தீவிரமாக அமல்படுத்தவேண்டும். அட, மனிதன் கழிவுத்தொட்டிக்குள் இறங்கக்கூடாது என்று அறிவிப்பு செய்ய வேண்டும். முடியுமா?
அனைவருக்கும் கல்வியில் சாதிய - பொருளாதார பாகுபாடின்றி அனைவரையும் முழு கல்வியறிவு பெறச்செய்ய வேண்டும். விவசாயியின் மகனும், எம்.எல்.ஏ, குவாரி அதிபர் மகனும் ஒன்றாக ஒரே கல்வி ஒரே உடையணிந்து படிக்க வேண்டும். சாத்தியமா ?
இதற்கெல்லாம் தீவிர இடது சாரி சிந்தனை கொஞ்சூண்டாவது வேண்டும். வருமா?
எல்லாத்துக்கும் மேல்,
இதெல்லாம் மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்து உங்களால் செய்ய இயலுமா? அம்புட்டு மதவெறி என்றால் வெள்ளைக்காரனுக்கும் இசுலாமியனுக்கும் கீழ்ப்படியோம் என்று அத்தனை இந்தியர்களையும் திருப்பியழைக்கும் மன தைரியமும் வலிமையும் இருக்கிறதா ?
அட முதலில் இந்தியை தேசிய மொழியாக நிறுவ முடிகிறதா என்று பாருங்க !

மாட்டுக்காக மனிதனை கொல்றதை விட்டுட்டு முதலில் அந்த மாட்டுக்கு நல்ல முழு தீவனம் கிடைக்குதான்னு பாருங்க.
எல்லாத்துக்கும் மேல விவசாயி சோறு தண்ணியில்லாம சாகுறான். அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிங்க. மாட்டுக்கு தீவனம் கிடைத்தால் மாடு சந்தோஷமா இருக்கும். மாட்டுக்கு இலவசமா நல்ல தீவனம் கிடைத்தால் விவசாயம் நல்லாருக்கும். விவசாயம் செழிச்சா விவசாயி நல்லாருப்பான். விவசாயி நல்லாருந்தா மாடும் நல்லாருக்கும். மாடு நல்லாருந்தா உங்க மனசும் குளிரும். உங்க மனசு குளிர்ந்தா ஐயா எசமான் ஊரு அமைதியாயிருக்கும். ஊரு அமைதியாயிருந்தா நாடு சிறக்கும். நியாயமாரே, பெரிய மனசு பண்ணுங்க.

நன்றி வணக்கம் !

(பின்குறிப்பு: உணவு குறித்து சட்டம் சொல்வதென்ன, மாட்டுக்கறி வரலாறு என்ன, மாடு - மனிதன் சுழற்சி முறை, ஜல்லிக்கட்டு - மாட்டுக்கறி அரசியல், மாட்டுக்கறி தடையில் MNC களின் இலாபம், மாட்டுக்கறிக்கு பின்னாலிருக்கும் சாதிய STD, இதையெல்லாம் விரிவாக பேசினால் பதிவு நீளும் என்பதால் குறைத்துக்கொண்டேன். இதெல்லாம் உங்கள் ஆறாம் அறிவுக்கே தெரியும் தானே) ;)

ஜே ரீபார்ன்
06/06/2017

Comments

Popular posts from this blog

பாவம் கருப்பு!

இருப்பதிலேயே பாவப்பட்ட மனிதர்கள் இந்த கடவுள் மறுப்பாளர்கள் தான்.  மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் இவர்களுக்கு மதவாதிகள், சாதியவாதிகள், சனாதனிகள், Just Spiritual, Cosmic Energy சீடர்கள், இறை நம்பிக்கையாளர்கள், அரை குறை நம்பிக்கையாளர்கள், கொஞ்சூண்டு நம்பிக்கையாளர்கள், Pseudo Science பேசுபவர்கள், ஆதி யோகிகள், சங்கிகள், மென்சங்கிகள், வருங்கால சங்கிகள் என எல்லா பக்கமும் அடி விழுவது ஜகஜம். எந்த பக்கமும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள், எல்லா பக்கமும் விரோதம் இருக்கும், வீட்டில் கூட விழாக்களுக்கு அழைக்க மாட்டார்கள், கண்டுகொள்ள மாட்டார்கள், 24x7 கண்காணிப்பு பட்டியலிலேயே இருப்பார்கள். வேலை என்றால் இன்னும் சிறப்பு. அவர்கள் இருக்கும் இடமெல்லாம் பதற்றமான பகுதியாகவே கருதப்படும். எப்படா சிக்குவான் ஆப்பு வைக்கலாம் என்று ஒரு கூட்டமே 'கமான் கமான்' என்று காத்திருக்கும். பகுத்தறிவை முன்னிலைப்படுத்திய பெரியார் இருந்தபோதே இவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடு, கல்வி முன்னுரிமை, வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருந்தால் இவர்களுக்கான வாழ்வாதாரமும் எதிர்காலமும் உறுதியாகியிருக்கும். பகுத்தறிவுவாதமும் இன...

Nethaji : the Real MaN

Netaji Subash Chandra Bose (1897-1945)   ( as per Govt Says ) Subash Chandra Bose as a youth Bose with family    Bose with wife, brother   Bose with his Austrian wife married in 1930 Bose with German soldiers     Bose with his brother   Bose giving speech at Tokyo More Pics @ http://www.facebook.com/media/set/?set=a.286748928046266.92796.100001334838164&type=1&l=13b5387d19

Wikipedia Celebrates Women!

விக்கிப்பீடியா 19 இலட்சம் வாழ்க்கை வரலாறுகளை கொண்டுள்ளது. அதில் 20% பெண்களுடையது. ஆனால், பெண்களைப் பற்றிய பல தலைப்புகள் இன்னமும் முழுமையாக தொகுக்கப்படாமல், முடிக்கப்படாமல் உள்ளன. விக்கிப்பீடியாவை முழுமையான ஒரு அறிவு சார் தளமாக கொள்ள வேண்டுமென்றால் இவை முழுமையடைய வேண்டும். பெண்கள் தினத்தை முதன்மைப்படுத்தி பாலின வேறுபாடுகளை களையவும், ஒடுக்கப்பட்ட குழுக்களை முன்னிலைப்படுத்தவும், பலரை பிரதிநிதிப்படுத்தவும் இம்முயற்சியை விக்கிப்பீடியா எடுத்துள்ளது. இவை தொடர்பாக பல நிகழ்வுகள் உலகம் முழுக்க நடைபெற்று வந்தாலும், மெய்நிகராக மொழிபெயர்ப்பு, கட்டுரை எழுதுதல் என பங்களிக்க விரும்புகிறவர்களையும், குறிப்பாக, Content Writing - Content Editors போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வமுடையவர்களையும், ஏற்கனவே என் பதிவுகளில் இத்தகைய ஆர்வத்தை வெளிப்படுத்தியவர்களையும் இதில் பங்களிக்க அழைக்கிறேன். நீங்கள் நேரடியாகவோ அல்லது எங்களுடன் இணைந்தோ தமிழ், ஆங்கிலம், இந்தி அல்லது பிரெஞ்சு விக்கிப்பீடியாவில் பங்களிக்கலாம். மொழிபெயர்ப்பு அல்லது கட்டுரைகள் மட்டும் எழுதி, தொகுத்து பங்களிக்க விரும்புகிறவர்களும் இணையலாம்...