Disclaimer
Backpacking பற்றி பேசுவதால் இவர் அப்பாடக்கர் என்றோ, Backpacking, Travel Blogging ல் கைத்தேர்ந்த அறிஞர் என்றோ, Professional என்றோ நினைத்துவிட வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுவான வழக்கான 'ஊர் சுற்றி' என்றே அழைக்கும்படி தரைக்கு கீழே தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஐரோப்பாவில் 'நீயெல்லாம் Backpacker என்றால், நாங்க யாரு? ' என்று கேட்பதாலேயே இந்த ஏற்பாடு. நன்றி !!!
எனக்குத் தெரிந்து நம்மூரில் Trekking Club இருக்கிறது, Biker Club இருக்கிறது, ஆனால், Backpacking Club இல்லை.
ஏன் ?
யோசித்துப் பார்த்தால், அதைத்தான் நாம எல்லாருமே பண்ணுறோமே .. அதுக்கு எதுக்கு க்ளப் ?? கட்சிதான் ஆரம்பிக்கணும் ... ஹிஹிஹி...
ஆனால்,
கொடைக்கானல், ஊட்டி, வால்பாறை, ஏற்காடு, குற்றாலம், கன்னியாகுமரி போக இன்னோவா கார் புக் பண்ணி, இல்ல இன்டிகோ காரில் ஆண்டுக்கு ஒரு தடவை ஒவ்வொரு ஊருக்கு போவது ஊருக்கு போகும் அனுபவத்தை தரும். புதுப்புது ஊர்களைக் காணும் மகிழ்ச்சியைத் தரும். ஆனால், அப்படியெல்லாம் தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு போன என்னை டூரிஸ்டுன்னு சொல்லிட்டாங்க. அது அப்படி பண்ணக் கூடாதாம்.
இதையே கொஞ்சம் இப்படி நினைத்துப் பாருங்க.
தூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர தேசம்...
மொழி தெரியாத ஊர்கள்...
அட எதுக்கு இவ்வளவு இழுத்துக்கிட்டு...
சென்னையிலிருந்து கொடைக்கானல் போக,
அங்கிருந்து பாண்டிச்சேரி பஸ் பிடித்து கடலூர் போய், அங்கு இரண்டு நாட்கள் ஊர் சுற்றிவிட்டு, அங்கிருந்து புதுவை வந்து கடலில் காலை நனைத்து, ஊரை அளந்துவிட்டு, அங்கிருந்து திருச்சிப் போய், லோக்கல் பஸ்ஸில் திண்டுக்கல் போய் தங்கி ஊர் சுற்றி பார்த்துவிட்டும்,
வழியில் நிலக்கோட்டையில் நண்பர் தோட்டத்தில் மேய்ந்துவிட்டும்,
ஆற அமர கொடைக்கானல் போவதுதான் Backpacking ஆம். இது கொடைக்கானல் போயும் முடியாதாம். டென்ட் அடிக்கிறதிலிருந்து (கேம்பிங்) இன்னும் என்னென்னவோ இருக்குங்கறாங்க.
சிம்பிளா சொல்லணும்னா,
முதுகில் ஒரு பையில் தேவையான எல்லா பொருட்களையும் போட்டு நிரப்பிக்கிட்டு ஒவ்வொரு ஊரிலும் ஏறி இறங்கி தங்கி அதே ஊருக்கு டவுன் பஸ்ஸில் போவதற்கு பெயர்தான் Backpacking ஆம்.
இதை இன்னும் வித்தியாசமாய் வெவ்வேறு விதங்களின் செய்கிறார்கள். சிலர் சமூக நலன்களுடன் செய்கிறார்கள். அண்மையில் அப்படி நான் பார்த்தது பிரபாகரனின் வட இந்தியப் பயணம். வட இந்திய கிராமங்களுக்கு சென்று, கிராமங்களில் மக்களோடு மக்களாக தங்கியிருந்து, அவர்களுக்கு உதவ முடிந்தாலோ அல்லது அவர்கள் வாழ்வியலையாவது பதிவு செய்வது இதில் ஒரு வகை. இப்படி தங்கள் பயணத்தை சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்றிக்கொள்பவர்கள்
HARDCORE VOLUNTEER.
BACKPACKING இல் நிறைய வகை உள்ளது. கோவிலுக்கு புனிதப் பயணிகளாக செல்பவர்களும் இருக்கிறார்கள். உச்சக்கட்டமாக நம்மாட்கள் வேளாங்கண்ணிக்கு நடைப்பயணமாக செல்வதில் BACKPACKING TRIP இன் அனுபவங்களை ஓரளவாவது பெற்றிருப்பார்கள்.
இவர்கள் SPIRITUAL TRAVELER அல்லது PILGRIMERS எனலாம்.
ஊர் ஊராக சுற்றி, சிறந்த இடங்களாகத் தேடி சரக்கடித்து விட்டு, நன்றாக உண்டு விட்டு செல்லும் வகையினரை PARTIER எனலாம். இது பாண்டிச்சேரிக்கு இரண்டு மூன்று நாட்கள் காரில் வரும் குரூப் அல்லது நண்பரைப் பார்க்க வரும் குரூப்புகளுக்கு உரித்தான செயல். 2010 இல் கல்லூரி படிப்பு முடித்திருந்தபோது, கப்பல் பொறியியலாளருக்கு படித்துக்கொண்டிருந்த என் நண்பர்கள் குழாம் வருடா வருடம் அவர்கள் விடுமுறையில் இப்படித்தான் ஏதாவது ஒரு ஊருக்கு போவோம். தேனி போக, இலட்சுமிபுரத்தில் தங்கிவிட்டு கம்பத்திற்கு ஒரு நாள் போவது, தேனி டவுனில் சிறந்த உணவகமாக தேர்ந்தெடுத்து நாளுக்கு ஒவ்வொன்றாக போவது, பெரியகுளத்தில் நண்பர் வீட்டில் சுவையான கறிக்கஞ்சி அடிப்பது என்று பயணம் போனது என இதே வகை கூத்து நடந்தது.
இந்த Backpacking கலாச்சாரமும் நம்மூர் Cycling, Mountain Biking, Hiking, Trekking, Motor Club கள் போல் Over Commercialised ஆகிவிடுமோ என்று கவலையளிக்கிறது. அதாவது, சாதாரண மக்களும் செய்யக் கூடிய ஒன்றை பயங்ங்ங்ங்ங்கர பில்டப்புடன் ஸ்பான்சர், விளம்பரம் வரை கொண்டுப் போய் அல்டிமேட் ஆக்குவது. ஐ மீன் அப்பாடக்கர்ஸ். ஆனால், அதற்கு காலமெடுக்கும். காரணம் சொகுசாவே இருக்க நினைக்கும் நம் வளரும் சமூகம் இதை செய்ய கொஞ்சம் யோசிக்கும். Trekking, Hiking கூட பேக்கேஜ் போட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் போய் வரலாம். ஆனால், இது முடியாது.
Backpacking is perceived as being more than a holiday, but a means of education.என்கிறது "University of Travel": Backpacker Learning" எனும் நூல். ஆக, ஊர் சுற்றுவதை விட அனுபவங்களை பெறுவதும், புதிதாக கற்றுக்கொள்வதுமே இதன் அச்சாணி.
Foreign காரன் நாடு நாடா போவான். நாம எங்க போவது என்கிறீர்களா?
உண்மையில் இந்த வகையில் இதன் அருமை தெரியாத ஆட்கள் நாம்தான்.
அவர்களுக்கு உணவு, கொசுக்கடி, வெப்பம் சிக்கல்களிருக்கிறது. இவையெல்லாம் இருக்கும் அவர்களே நம்மூரில் அதிகமாக சுற்றிக்கொண்டிருக்கும்போது இதெல்லாம் அசால்டாக நினைக்கும் நமக்கு ஏன் மலைப்பாகத் தெரிகிறது??
மே மாதம் என்னை ஊருக்கு வர சொல்லி மாமான் ஒருவர் விடாப்படியாக கேட்டுக்கொண்டிருந்தார். பள்ளி விடுமுறையாதலால் எல்லாரும் ஓரிடத்திலிருப்பார்கள், மகிழ்ச்சியாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். நான், வெயிலை காரணம் காட்டிக்கொண்டிருந்தேன். அவரோ ஒன்றே ஒன்றுதான் கூறினார்
' ஃபாரின் கேர்ள்சே அவாய் செப்பல் போட்டுக்கிட்டு திருவண்ணாமலைல நடந்து போயிட்டிருக்குங்க, உனக்கு என்ன வலிக்குது? வருவியா ' என்றார். ஹிஹிஹி... இதான் நாம.
CAMPING, TREKKING ஆகியன இதன் அடுத்தக்கட்ட நிலைகளே. இவை அந்தந்த கட்ட அனுபவங்களைத் தருமே தவிர ஒட்டுமொத்த அனுபவப் பாடங்களைத் தராது.
வெளிநாட்டுக்காரர் போல் நாடு நாடாக செல்லத் தேவையில்லை. அவர்கள் ஆண்டுதோறும் படையெடுத்து வரும் நம் நாட்டு பகுதிகளையே கண்டறிந்து தேடிச் சென்றால் போதுமானது.
வெளிநாட்டினருக்குத் தெரிந்த நம் ஊரின் அருமை நமக்குத் தெரியவில்லை. தெரியவும் தெரியாது.
புகைப்படமெடுக்க விரும்புகிறவர், அழகிய இயற்கை காட்சிகளை இரசிக்க விரும்புகிறவர், நிம்மதியா இயற்கை சூழலில் ஓய்வெடுக்க விரும்புகிறவர், சிறிய கூடாரம் அமைத்து தங்க விரும்புகிறவர், மக்களுடன் மக்களாக வாழ விரும்புகிறவர், வெறும் சுற்றுலாவாக மட்டும் செல்ல விரும்புகிறவர் என இன்னும் பற்பல வகைகளில் நம் நாட்டில் நம் தேர்வுக்கேற்ப பகுதிகளும், பயணத் திட்டங்களும் உள்ளன.
அதை,
வருகின்ற பதிவுகளில் பார்ப்போம்.
(பின்குறிப்பு: இது போன்ற பயண அனுபவங்கள் உங்களிடம் இருக்கிறதா? வாருங்கள் இணைந்து பதிவேற்றுவோம். மின்னஞ்சல் செய்க. )
Don't give up. Write more!
ReplyDelete