Be a roman in rome என்பதும், பாம்பு தின்னும் ஊரில் நடு கண்டம் நமக்கு என்பதும் பழமொழி. அடிப்படைவாதக் கருத்தோடு ஒரு நாட்டுக்குள் வந்துவிட்டு அந்நாட்டை குற்றம் சொல்வது அபத்தத்தின் உச்சம். வெள்ளைக்காரன் இந்திய கலாச்சாரத்தை, பண்பாட்டை குறை சொன்னால் எப்படி நமக்கு மூக்கு மேல் கோபம் வருமோ, அப்படித்தான் ஐரோப்பாக்காரன் நாம் அவர்களை விமர்சிப்பதைப் பார்த்து எரிச்சலடைவான். அது அவர்கள் நாட்டு கலாச்சாரம். அதை குறை கூறிக்கொண்டு, குற்றம் பார்த்துக்கொண்டிருந்தால் குண்டு சட்டியில்தான் குதிரை ஓட்ட வேண்டும். வெள்ளைக்காரர்கள் பர்தா அணிய வேண்டும் என்று நோட்டீசெல்லாம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மொராக்கோவிலிருந்து வரும் பெண்கள் பர்தா அணிவதில்லை. அவர்கள் மற்ற பெண்களைப் போல சமமாக வாழ வேண்டுமென நினைக்கிறார்கள். ஆசிரியைகளாக பணிபுரிகிறார்கள், உயர் அலுவலர்களாக பணிபுரிகிறார்கள் அவர்களிடம் இந்த உணவுதான் உண்ண வேண்டும், இந்த உடைதான் அணிய வேண்டும் என்ற உடைக்கட்டுப்பாடு இல்லை. அதை அவர்கள் விரும்புவதும் இல்லை. அதையும் மீறி இவ்வாறான பேச்சுகளை ஊக்குவிப்பதால் வெறுப்புதான் வளரும். உடையால், உணவால் அடிமைப்படுத்த நினைப்பதும், பிறரை கட்டுப்படுத்த நினைப்பதும் அடிப்படைவாதத்தின் ஒரு சாரம்சம். இந்தியா போன்ற நாடுகளில் அவை கசப்பு மருந்தாக பார்க்கப்பட்டாலும், மதத்தை தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் இனிப்பைப் போலதான் பார்க்கப்படுகிறது. ஆனால், முன்னேறிய நாடுகளில் அது இலுப்பைப் பூவாக பார்க்கப்படுவதை அவர்கள் உணர்ந்துக்கொள்வதுமில்லை. ஏற்றுக்கொள்வதுமில்லை. உடையாலும், உணவாலும் ஒரு மனிதனை தரம் பார்ப்பதும், தரம் பிரிப்பதும் அடிப்படைவாதம் எனப்படுகின்ற பிற்போக்குவாதத்தின் வேலை. நாகரீகம் என்ற கோட்பாடையும் தாண்டி மனித இனம் ஏதேதோ நிலைக்கு போய்விட்ட நிலையில், இந்த அடிப்படைவாதிகள் தங்கள் நாடுகளில் தாங்கள் பின்பற்றும் நடைமுறைகளை இங்கும் செயல்படுத்த நினைத்து சொறிந்து சொறிந்து சுகம் கண்டுக்கொள்கிறார்கள். அதன் பெயர் கலாச்சார திணிப்பல்ல. மதக்கோட்பாடுகளின் திணிப்பு. பேரினவாதத்தின் எச்சம்.
பிரான்சில் Multi-Cultural Society யில் வாழ்வது எப்படி? அதன் சவால்கள் என்ன என்பதை குறித்தெல்லாம் மக்களுக்கு அறியத் தர துவங்கிவிட்டார்கள். குடிப்பெயரும் மக்களிருக்கும் பெரும்பான்மை பகுதிகளில் மக்களை கூட்டி அந்ததந்த பகுதி அசோசியேஷன்களில் presentation கொடுக்கிறார்கள். அவர்களை வற்புறுத்துவதில்லை. பாடமெடுப்பதுமில்லை.
இவர்களையெல்லாம் பார்த்துவிட்டு,
நம் நாட்டில் இந்தளவாவது பெண்ணியமும், முற்போக்கும் பேசத்துவங்கிவிட்டார்களே என்று நினைத்து மகிழ்ந்துக்கொண்டேன்.
இந்த உடை அணிந்தால்தான் அப்பெண் நல்ல பெண் என்று நினைத்தால் பிரச்சனை அப்பெண்ணின் உடையிலில்லை, அளவிடும் நம் அறிவில்தான் உள்ளது.
ஃபாரின் வந்தாவது திருந்துங்க.
டாட் !!!!
Comments
Post a Comment