எல்லாரையும் போல பதினஞ்சாப்பு முடிஞ்சு ,
அதுக்கு பிராயச்சித்தமா நாலு வருசம் கம்பூட்டரு கம்பெனியில் வேலையப் பாத்துப்புட்டு,
அப்பன் ஆத்தா கனவை நனவாக்க மூணு வருசம் ,
பட்ட கடனை அடைக்க நாலு வருசம் ,
இப்ப
அவங்க பெத்த கடனை அடைக்க ஊருக்கு வாரேன் ...
அண்ணனும் துபாய் போய் காண்டிராக்ட் வேலையில செட்டிலாயிடுச்சு .
திரும்ப வர நாலஞ்சு வருசம் ஆகும் .
என்னாலேயோ
மாசத்துக்கு ஒருக்கா கூட ஊருக்கு வர முடியல.
சொந்த பந்தத்த பார்க்க முடியல.
இந்த தடவ பல மாசமா வேண்டாத தெய்வத்தை விட
என் டீம் லீடரை வேண்டி
ஒரு வாரம் லீவு வாங்கி வாரேன் ...
வழக்கமாக இரநூறு பிடுங்குற அந்த ஓட்ட கவருமென்டு பஸ்ஸ வேணும்னே விட்டுட்டு,
ஊருக்கு போயி ஒரு வாரம் இருந்து கறிக்கஞ்சி அடிக்கிற காச
ஒரே தடவையில ஊருக்கு போற டிக்கெட் காசுன்னு புடுங்குற அதே வேகமா போற டிராவல்ஸ் பஸ்.
நானாடா கேட்டேன் சாய்யுற நாற்காலி , மல்லாக்க படுத்துக்குற நாற்காலின்னு ????
தக்காளி ... பாய் மட்டும் கொடுத்தா போதும் ,
பைய தலைமாட்டுக்கு வச்சிட்டு பஸ்சு டாப்புலையே படுத்துட்டு வருவோம்ல ...
பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி எங்கூருக்கு போற ,
நான் இசுக்கூல்ல படிக்கிறப்ப போன அதே டிரைவர் வீராசாமி அண்ணன் கூட மாறாத
அதே டவுன் பஸ்சுல போயி இறங்கப்போறேன் ...
வழக்கமா நம்ம ஆட்டோகிராப் கிராக்கிகளுக்கு பேருந்துல ஏறி ஜன்னலோரம் சீட் கிடைச்சதும்
அடிக்கிற சாரக்காத்துல வருமே ஒரு இனிமையான நினைவு
அதே நினைவு என்னையும் விடாம பின் தொடர்ந்தே வந்துச்சு.
ரெண்டாப்பு படிக்கையில ரொம்ப தெகிரியமா கணக்கு வாத்தியார் வகுப்ப கட் அடிச்சிட்டு புளியங்கா பொறுக்கப் போனது ,
அஞ்சாப்புல வீட்டுப்பாடத்த காட்டமாட்டேன்னு சொன்ன என் பக்கத்துல உக்காந்திருந்த ராணி பொண்ணோட நோட்ட கிழிச்சது,
எட்டாப்புல அதே ராணி பொண்ணோட பேர மதிய இடைவேளை நேரத்துல பிளாக் போர்ட்ல எழுதி வச்சு சயின்ஸ் டீச்சர் கிட்ட தர்ம அடி வாங்கினது ,
இசுக்கூலுக்கு போக மாட்டேன் , காடை முட்டை திருடத்தான் போவேன்னு சொல்லி அடம் பிடிச்சும் தர தரன்னு இழுத்துட்டு வந்து வகுப்பில விட்ட என் கூட்டாளி குமரேசன் அப்பாவை தூரமா நின்னு அவரு வண்டியில போறப்ப ஜல்லி கல்லியால அடிச்சது ........'
அவரு பேரு கூட ...
ஆங் ஆங் .........
ஆ .. ம்ம்ம்ம்ம்ம் .........
கந்தசாமி ...
கந்தசாமி அப்பா ...
அவர விட என் கூட படிச்ச குமரேசன்ன பத்தி சொல்லியே ஆகணும்.
நான் என்ன பண்ணாலும் கூடவே நின்னு அடிவாங்குற கூட்டாளி தான் குமரேசன் ...
நல்லா படிப்பான் . கணக்குல மட்டும் புலி .
கேட்டா அப்பா கூட கடையில வேலை பாத்து கத்துகிட்டேன்பான்.
எட்டாப்பு படிக்கும்போது
எனக்கும் அதிசயமா ' ஆச வந்துடுச்சுடா கடையில கணக்கு பாடம் கத்துக்கறேன் ' னு கடைக்கு போனா,
ஒத்தாசைன்னு தூக்கம் வரும் வரை பொட்டலம் மடிக்க விட்டுடுவான் ,
இல்ல சாமான அடுக்க விட்டுடுவான்
பொறாம பிடிச்சவன்.
விவரம் தெரியும் வரை இதே கொடுமை , அடக்குமுறை நீடித்தது.
ஒரு நாள் அவங்கப்பா கேட்டேவிட்டார்.
' ஏம்பா , வீட்டுல இருக்கறத விட்டுட்டு இங்க வந்து மல்லி , மொளக வாசத்துல வந்து கஷ்டப்படுற ?? என்ன பிரச்சனை ??? '
குமரேசனின் அநீதியை திக்கித்திக்கி விவரித்தேன் ..
' அட போப்பா ! இத போயி பெருசா எடுத்துக்கிட்டு ! வாத்தியாருக்கு தெரியாததையா நான் சொல்லிக்கொடுக்கபோறேன் ??? அவன் உன்னிய ஏமாத்தியிருக்கான் ' என்றார்.
' இல்லப்பா , எனக்கு சொல்லிக்கொடுங்க . நான் கத்துக்குவேன் ' என்றேன்
' விட மாட்டியே ' என்றபடி , கடையில் இருந்த பொருட்களை வைத்து பிராக்டிகல் வகுப்பு எடுக்க ஆரம்பித்தார் - அவ்வப்போது.
ஒரு நாள் ...
அத்துன்ப தினம் வந்தது ...
கணக்கு பாடத்தில் காட்டிய முனைப்பு ,
அறிவியல் பாடத்தில் சிரிப்பாய் சிரித்தது.
ரேங்க் கார்டில் வகுப்பு வாத்தியார் அப்பாவிடம் கையெழுத்து வாங்கி வர தீர்க்கமாக சொல்லி விட்டார் :(
அப்பா இல்லை , ஊருக்கு போய்விட்டார் . திரும்பி வர டிக்கெட் கிடைக்கவில்லை என்ற அரதப்பழசான என் தாத்தா காலத்து டெக்குனிக்குகள் கைக்கொடுக்கவில்லை.
விடுமுறைக்கு போனால் காசு கொடுக்கும் பாட்டியை கொல்லவும் மனம் வரவில்லை..
கொடுமையான நேரம்.
வேறு வழியில்லை ...
நேராக அம்முன்னிரவில் துணிச்சலாக குமரேசன் அப்பாவிடம் போனேன் ,
அவன் விளையாட போய்விட்டான் என்ற நம்பிக்கையோடு.
இரண்டாப்பில் என்னை இழுத்து சென்று வகுப்பில் விட்ட அதே குமரேசனப்பா. கந்தசாமி அப்பா.
' என்னப்பா என்னாச்சு ?? மொகம் வாட்டமா இருக்கு ? ' குமரேசனின் அம்மா
' ஒண்ணுமில்லேம்மா , அப்பாவ பாக்கணும் '
சாப்பிட்டுக்கொண்டிருந்தும் நான் வந்ததும் உடனே எழுந்து வந்தார்.
' என்னப்பா இந்த நேரத்துல தனியா வந்திருக்க ? என்ன ஆச்சு ? குமரேசன தேடி வந்தியா ? அவன் கார்த்தி சுத்த போயிருப்பானே !!! '
இல்லப்பா உங்களைத்தான் பாக்கணும் என்றபடி என் நிகழ்கால அந்த கொடுமையான சம்பவத்தை விவரித்தேன்.
' உன் ரேங்க் கார்ட வாங்க நான் வரணுமா ?? பெரியவருக்கு தெரிஞ்சா கோவிச்சுக்குவாருப்பா. உங்கப்பா நாட்டாருக்கு தெரிஞ்சா ஊரு பிரச்சனையாயிடும் !! ' என்றபடி வாட்டமானார் .
' இல்லீங்கப்பா ! இந்த முறை நீங்க வந்தா மட்டும் போதும் . அடுத்த முறை எப்படியாவது படிச்சு பாசாயிடுவேன். பெயிலானது வீட்டுல தெரிஞ்சா அப்பா வேலனோட பெல்ட்ட வாங்கி உரிச்செடுத்துருவார் ' என்றேன் கண்ணீர் மல்க.
என் அப்பாவின் காரியதரிசி வேலனின் பட்டை பெல்ட்டுக்கு வீட்டில் எனக்கு அவ்வளவு பயமிருந்தது.
தேர்வில் பெயிலாகும்போதெல்லாம் வேலனிடம் அப்பா ஒத்திக்கு கேட்கும் அவனின் பெல்ட்டுதான் சத்தமாய் பேசும் ,
என் அலறலுடன்.
' சரிப்பா ! நான் யோசிச்சு சொல்றேன் ! நீ முதல்ல வீட்டுக்கு போ ! ' என்றார்.
சொன்ன சிறிது நேரத்தில் ,
' இருட்டுற நேரம் தனியா போற . மனசு கேட்கல ' என்றபடி தான் கடைக்கு சரக்கு எடுத்து செல்லும் பெரிய கேரியர் வைத்த சைக்கிளில் என்னை அழைத்து சென்று வீட்டுக்கு சில அடி தூரத்தில் முன்பே இறக்கி விட்டார்.
கையில் கொடுத்தாலே அது என்னவென்று கண்ணு தெரியாத என் அப்பத்தாவுக்கு ,
குமரேசனப்பா இருட்டில் தூரத்தில்ல்ல்ல் வந்து விட்டது மட்டும்
எப்படியோ கண்ணில் புலப்பட்டு விட்டது..
அந்த கம்பில் வாசலிலேயே அடி பின்னியெடுத்து விட்டது .
நான் என்னமோ ஊரு சுத்தி , அவரு கண்டிச்சு வீட்டுல விட்டார் என்ற கணிப்பில் ...
நான் எண்ணிய அந்த நாளும் வந்தது ...
ஜாமீனில் எடுக்க வருவார்கள் என்ற காத்திருப்பில் சிறையில் இருக்கும் கைதி போல காத்திருந்தேன் .
ரேங்க் கார்டு வாங்க எல்லாரும் வந்தார்கள்.
பர்ஸ்ட் ரேங்க் எடுத்த வெங்கட் அப்பா முதற்கொண்டு அஞ்சு பாடத்தில் புட்டுக்கிட்ட ராமு அப்பா வரை வந்துவிட்டனர்.
நேரமாக நேரமாக எங்களைப் பார்த்த வாத்தியாரின் முகம் கர்ணக் கொடூரமாகிக்கொண்டிருந்ததது.
குமரேசனும் , நானும் , குடும்பச்சண்டை நிறைந்த ரகுமானும் மட்டுமே பாக்கி.
மூவருமே வாத்தியாரையும் , வாசலையும் பார்த்துக்கொண்டே தவமிருந்தோம்.
பள்ளி விட அரை மணி நேரம் பாக்கியிருந்தது ...
தனது பிரத்யேக புடுபுடு டிவிஎஸ்சில் ஆபத்பாந்தவராக வந்தார் குமரேசனப்பா.
என்னையும் காப்பாத்த வந்துட்டார் என்ற என் எண்ணம் வலுப்பெற்றது.
முதலில் குமரேசனின் ரேங்க் கார்டை வாங்கும் படலம் இனிதே முடிவுற்றது.
என் கதி அதோகதிதான் என்ற எண்ணம் துளிர்க்க ஆரம்பித்தது.
' கோபுவோட அப்பாவால வரமுடியல. அதனால அவனோட ரேங் கார்டையும் நானே வாங்கிக்கறேன். செய்தியையும் சொல்லிடறேன் ' என்ற நான் அதிகம் எதிர்பார்த்திருந்த அந்த முத்தான வார்த்தைகளை உதிர்த்தார்.
' !@#$%^ '
- இது என்னைப்பற்றி எங்க கிளாஸ் வாத்தி அவரிடம் சொல்லிய ரிப்போர்ட்டு..
( வருங்கால வரலாறு தவறாக பேசும் என்பதால் அதை கோர்டு வேர்டில் சொல்விட்டேன் )
அன்று என் தலை தப்பித்தது.
வீட்டிலோ ,
' வாத்தியாருக்கு வயித்து வலி ,
வாத்தியாருக்கு வேற வேலை ,
வாத்தியாரு லீவு ,
வாத்தியாருக்கும் அவரு சம்சாரத்துக்கும் சண்டை ' என்ற காரணங்கள் இடைவிடாது கூறியபடியே
அவர்கள் மறக்கும் வரை சமாளித்தேன்.
அந்த இன்ப நினைவுகள் சொல்லி மாளாது ....
பத்தாப்பு படிப்பு முடிந்ததும் ,
மேற்படிப்பு டவுனிலும் ,
அதற்குமேல் சென்னை , ஊட்டி என்றும் ஓடிவிட்டன.
அதற்கப்புறமும் பார்த்திருக்கிறேன் குமரேசனப்பாவை ,
இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே போல
சீரியசாயிருந்த அப்பத்தாவை பாக்க ஊருக்கு வந்திருந்தபோது ,
பத்து மணிக்கு பேருந்திலிருந்து இறங்கி ஊருக்கு எப்படிப்போவது என்று திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்த வேளையில் ....
தன் மங்கலான டிவிஎஸ் ஒளியிலும் என்னை கண்டுப்பிடித்துவிட்டார் குமரேசன் அப்பா .
' வாப்பா. என்னப்பா இந்த நேரத்தில ??? '
' ஊருல இருந்து கடைசி பஸ்சில் இப்போதான் வந்தேன் ! '
' பஸ்சு நேரம் தெரியாதா ?? சரி வா வண்டியில ஏறிக்கோ ' என்றார்
எப்படி இவர் டபுள்ஸ் அடிப்பார் என்ற சந்தேகம் இருந்தாலும் ஏறிக்கொண்டேன் , ஊர் போய் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் .
இல்லை ,
பயத்தில்.
' எங்கப்பா படிக்கிற ? '
' ஊட்டியில '
' பரவால்ல நல்ல எடம். சந்தோசம் ! ' என்று முடித்துக்கொண்டார்.
இங்க குமரேசனப்பா பத்தி சொல்லியே ஆக வேண்டும் .
பெரிதான அறிமுகம் ஏதும் தேவையில்லை ... இல்லவும் இல்லை.
ரெண்டாப்பு முதல் பத்தாப்பு படிக்கிற வரை என்னுடன் நல்ல்ல்ல்லா படித்த நல் ஆப்படித்த குமரேசனின் தந்தை .
நல்ல திடமான ஆள் .
வலது கையில் சில்வர் கலர் எச் எம்டி வாட்ச் கட்டியிருப்பார்.
எப்போதும் வெள்ளை வேட்டி தான்.
அழகர் கோவில் ரோட்டில் மளிகை கடை வைத்திருந்தார்.
நான் கணக்கு பாடம் படித்த அதே இராப்பள்ளிக்கூடம்.
செம கருப்பு. மனசு வெள்ளை.
அன்று கடையை மூடிவிட்டு வீட்டுக்கு போகும் நேரத்தில் அவர் என்னை கண்டுப்பிடித்துகொண்டார்.
.
அன்று அந்த பொட்டல் காட்டை தாண்டுவதற்குள்ளாகவே தூங்கி விழுந்தேன்.
இதை அவர் அனுமானித்திருக்கக்கூடும்.
' ரொம்ப தூக்கம் வருதாப்பா ??? வந்தா அப்பா முதுகுல சாஞ்சிக்கோ ! ' என்றார் வாஞ்சையுடன்.
' அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா . மேடு பள்ளம் அதான் ... ' என்றேன் சமாளித்தபடி.
குமரேசன் அப்பாவிடம் அப்பொழுது கூட கணக்கு பாடம் எனக்கு சொல்லிக்கொடுக்காததினால் இருந்த 'பரம்பரை (!) விரோதத்தினால் குமரேசன் பத்தி கூட விசாரிக்கவில்லை.
முகத்தை நொடிக்கொருமுறை துடைத்துக்கொண்டேன் , வெறுங்கையினால்.
வழமை போல அன்று போல வீட்டுக்கு சில அடி தூரத்தில் இறக்கி விட்டார்.
' சரிப்பா வீடு வந்திருச்சு. உடம்ப பாத்துக்கோ. வாரேன் ! ' என்றபடி வண்டியை திருப்பினார்.
பதிலேதும் சொல்லாமல் லேசாக தலையாட்டினேன் .
அன்றைக்கு நான் அப்பத்தாவிடம் அடி வாங்கினது அவருக்கு தெரிந்திருக்கக்கூடும்.
உறுத்தியிருக்கலாம்.
.
ஆண்டுகள் கழிந்தன.
பேசுபுக்கில் ஏதாச்சையாக என் குல எதிரியை கண்டேன். ஆட் ப்ரெண்ட் கொடுத்தேன்..
படிப்பும் வராமல் , அப்பா கடையையும் நடத்தாமல் , டவுனில் எங்கேயோ அரிசி கடை வைத்திருப்பதாய் அறிந்தேன்.
நல்லா இரு இராசா என்றபடி கைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டேன்.
' ஊருக்கு வந்ததும் கூப்டுடா மாப்ள ' என்றான் கடேசியாய் பேசியபோது.
இதோ இன்று ஊருக்கு வந்து விட்டேன்.
அதே ஊரு ,
அதே சாலை,
ஆனால் நேரம் மட்டும் இரவு பதினொன்னு.
சரி ,
அதே பொட்டல் காட்டை கடந்துப் போக வேண்டும்.
இருங்கள்
பயம் தெரியாமல் இருக்க என் கேலக்ஸி III யின் எட்போனை அழுத்தி சொருகிக்கொள்கிறேன்.
கொள்ளி வாய் பிசாசாக கிங்ஸ் பில்டரை பற்ற வைத்துக்கொண்டேன்.
ஊர் போய் சேரும் வரை எப்படியும் நான்கைந்து தேவைப்படும் என்பதால் கையிருப்பை உறுதி செய்துக்கொண்டேன்.
30000 காசு கொடுத்து இதை வாங்கினதுக்கு பதிலாக நோக்கியா 1100 வை யாவது வாங்கியிருக்கலாம்.
இந்த கும்மிருட்டில் டார்ச்சுக்காவது பயன்பட்டிருக்கும்.
ஒரு பர்லாங் நடந்திருப்பேன் .
தூரத்தில்ல்ல்ல்ல்ல்ல் வண்டி வரும் ஓசை கேட்டது.
அன்று போல் குமரேசனப்பாவா ? என்று எனக்குள் சிரித்துக்கொண்டேன்.
வந்தது சாட்சாத் அவரேதான்.
என்னைப்பாத்து புன்முறுவல் பூத்தார் , வண்டியில் ஏறிக்கொள்ளும்படி.
அந்த பெரிய மூட்டையுடன் வெட்கமில்லாமல் ஏறிக்கொண்டேன்.
நான் ஏறியதும் லைட்டாக தடுமாறினார். காலால் சமாளித்து தாங்கிக்கொண்டார்.
அவரிடம் முன்பைவிட நிறைய மாற்றங்கள்.
ஆளே பாதியாகியிருந்தார்.
ரெட்டை நாடி உடல்.
இன்னும் கருத்துப்போயிருந்தார்.
நரம்புகள் தெரிய ஆரம்பித்திருந்தன.
முன் தலையில் முடி கொட்டிப்போயிருந்தது.
' என்னப்பா .... ' என்று நான் ஆரம்பிக்கும் முன்னரே அவரே துவங்கினார் ...
' நல்லாயிருக்கியாப்பா ??? பாத்தியா அப்பாதான் நீ எப்ப ஊருக்கு வந்தாலும் வீட்டுல விடணும்ன்னு இருக்கு ' என்று சிரித்துகொண்டார்.
' அப்பாவுக்கு ஒரே அலைச்சல்பா. இந்த குமாரு கடைய கூட சரியா பாத்துக்கறது இல்ல. டவுனுக்கும் நம்ம கடைக்குமா நானே ஒத்தாளா அலைய வேண்டியதா இருக்கு . உடம்பும் முன்ன மாதிரி சரியில்ல. அதான் அங்க தடுமாறிடுச்சு . தப்பா நினைச்சுக்காதப்பா ' என்றார்.
உடனே இடைமறித்து ' அதெல்லாம் ஒண்ணுமில்லீங்கப்பா ! ' என்றபோது எங்க வீட்டுத்தெரு வந்திருந்தது.
' சரிப்பா நான் நாளை சாயங்காலமா வீட்டுக்கு வாரேன் ' என்றபடி விடைபெற்றுக்கொண்டேன்.
அவரும் தலையாட்டியபடி சென்று விட்டார்.
.
அடுத்த நாள் காலை ,
இனம் புரியாத பரபரப்பு மனதுக்குள்.
எட்டு மணிக்கே எழுந்து குளித்து ரெடியாகி விட்டேன்.
நேரா போயி இந்த குமரேசனிடம் நாலு கேள்வி கேட்க வேண்டும் என்ற உத்வேகம் மனதுக்குள் வந்தேவிட்டது.
இட்டலி ஊட்டிவிட்டுக்கொண்டிருந்த அப்பத்தாவின் கையை தள்ளி விட்டு அப்பாவின் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.
வருடக்கணக்கானாலும் மாறாத அதே தெருக்கள் என்பதால் ஐந்தாறு வருடங்கள் முன்னதாக வந்த ஊரெனினும் எளிதாக குமரேசன் வீட்டை கண்டுப்பிடித்தேன்.
பூட்டப்பட்டிருந்தது.
கைப்பேசியில் அழைத்தேன்.
டவுனில் இருப்பதாக சொன்னான். அதே வேகத்தில் வண்டியை திருப்பினேன்.
டவுனுக்கும் வந்து கடையில் அவனைத் தேடினேன்.
' கடையில இல்லடா மாப்ள , நான் சொல்ற எடத்துக்கு வாடா ! ' என்றான் சஸ்பென்ஸ் வைத்தபடி.
ரெண்டு மணி நேரம் தேடிச்சென்றால் டாஸ்மாக்கில் இருந்தான், செம போதையில்.
' உனக்கெல்லாம் எதுக்குடா நாயே சரக்கு ? ' என்றபடி சரக்குடன் இருந்த பாட்டிலை உடைக்கத் தூக்கினேன்.
அதிர்ச்சியில் ' இருடா மாப்ள. வேற காசில்ல. ஒரு நிமிஷம் இரு ' என்றபடி தோளை அழுத்தி உக்கார வைத்தான்.
' ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க முதல்ல ரெண்டு கட்டிங்க போடு. அப்புறமா நான் சொல்றத கேளு புரியும் ! ' என்றான்.
கோவத்தில் மறுத்தாலும் இருந்த கடுப்பில் அடித்த கட்டிங் நான்கானது.
அவன் சொன்ன கதைகள் எதுவும் காதில் விழவில்லை.
அவன் அப்பாவை பத்தி அவன் சொன்னது அத்தனையும் குறை என்பது மட்டும் புரிந்தது.
' சரிடா நான் கிளம்பறேன் ' என்ற எழுந்தபோதுதான் நான் செம போதையில் இருந்ததே தெரிந்தது .
சமாளித்தபடி ' நீ முதல்ல கெளம்பு ! ' என்றேன்.
' கடைக்கு பாதுகாப்பு நாந்தான் இருக்கணும். நீ கிளம்பு , காலையில வீட்டுக்கு வரேன் ' என்றான்.
கடுப்பில் வாட்டர் பாட்டிலை அவன் மூஞ்சில் விட்டெறிந்தபடி வேகமாக வெளியே வந்தேன் அந்த நரகத்திலிருந்து.
முன்பை விட வேகமாக வண்டியை உதைத்து முறுக்கினேன்.
எப்படியும் ஊருக்கு போக அரை மணி நேரம். வாசனை குறைந்துவிடும். பாதி போதை தெளிந்துவிடும் என்ற கணக்கில் வாசம் தெரியாத மிட்டாய்களை பாக்கெட் முழுக்க நிரப்பிக்கொண்டேன்.
எப்படியும் தொண்ணூறில் போய்க்கொண்டிருந்திருப்பேன்.
ஒன்றாக ரெண்டு ரூவாய் காசு சேத்து மோர் வாங்கிக்கொடுத்த குமரேசன் இன்னைக்கு சரக்கு வாங்கித்தரான்.
காலத்தின் விசித்திர வேறுபாடும் ,கணக்கும் புரியத்துவங்கியது. வியப்பு மேலிட்டது !!!
ஊருக்கு போகும் அழகர் கோவில் சாலை...
எங்கூரு மேலூருக்கு திரும்ப வேண்டும்.
அதே பொட்டல் காட்டு வழிப்பாதை.
போகும் முன் வண்டியை நிறுத்தி கடைசியாய் ஒரு தம் அடிக்க மனசு கேட்டுக்கொண்டது.
கண நேரத்தில் தீக்குச்சியை கிழித்த வெளிச்சத்தில் தூரத்தில்ல்ல்ல்ல்ல் ஒரு உருவம் வருவது தெரிந்தது.
தெரிந்தவராய் இருக்கக்கூடும். வீட்டில் போட்டுக்கொடுக்கலாம். வருவதற்குள் தீர்க்க முயற்சித்து கப் கப்பென்று அடிக்கத்துவங்கினேன்.
ஒருவேளை களவாணி கும்பலாய் இருக்குமோ ? சரி பாத்துக்கலாம். ரெண்டே குத்து ஆளை சாய்ச்சிரலாம் என்ற எண்ணத்தில் கட்டையை ஏத்தி விட்டேன் , வேட்டியை இருக்க மடித்துக்கட்டினேன்.
அருகே வர வர உருவம் அரை குறையாய் தென்பட ஆரம்பித்தது .
அட ...
குமரேசனப்பா ....
அவசர அவரசமாய் தம் மை மண்ணோடு மண்ணாக நசுக்க்க்க்கிவிட்டு , காற்றில் வாசத்தை அணைத்தபடி
' என்னப்பா இந்த நேரத்தில் ?? ' என்று கேட்டேன்.
ஏதோ நினைவில் அவர் வந்திருக்கக்கூடும்.
திடீரென்ற என் கேள்விக்கு என் முகத்தை ஏறிட்டு ' ஓ நீயாப்பா ! நான் யாரோ நிக்கிறாங்கன்னு கவனிக்கல. இல்லப்பா டவுனு பக்கம் வேலை. வண்டியும் சரியில்லை அதான் நடந்தே வந்தேன் ' என்றார் என் கால் வலித்தீர்க்க வண்டியில் என்னை ஏற்றி வந்த அம்மாமனிதர்.
' என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க , வாங்க வண்டியில் ஏறுங்க ! ' என்றபடி வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.
' இல்லப்பா பரவாயில்லை ' என்றவரை வலுக்கட்டாயமாக ஏறச்சொன்னேன்.
சிறிது தூரம் சென்றிருக்கும் ...
' டவுனுக்கு குமாரு கடைக்கு போயிருந்தேன்பா ! மனசு கேட்கல ' என்று அவராகவே துவங்கினார்
பக்கென்றது ...
' அஞ்சு வட்டிக்கும் , அவங்கம்மா தாலிய அடமானம் வச்சும் அம்புட்டு காசுபோட்டு ஆரம்பிச்ச கடையில போதை போட்டுட்டு வாசல்ல படுத்திருக்கான்பா ' என்றபோது அவர் குரல் உடைந்திருந்தது.
' இல்லப்பா . அவன் கிட்ட நான் பேசறேன். நீங்க கவலைப்படாதீங்க ' என்றேன் என் வாயில் கை வைத்தபடி போதை வாசம் வராதளவுக்கு.
' அவன போய் பாத்தியாப்பா ?? '
' இல்ல்ல்ல்ல்ல். இல்ல்லப்பா .... போறேன் ! '
சற்று நேரம் அமைதியாயிருந்தார்.
ஊருக்கு போக சிறிது நேரமாகும். அப்பாவின் வண்டியில் பாதை புதிது.
அவர் மிகுந்த ஆழமான சிந்தனையில் இருக்க வேண்டும்.
வழி நெடுக்க பேசவேயில்லை.
சிறிது நேரத்திற்கெல்லாம்
என் மேல் வைத்திருந்த அவரது வலது கையின் பிடி இறுகல் தளர்ந்திருந்தது,.
என் தோளில் வைத்திருந்த உள்ளங்கை வியர்த்து என் சட்டையில் லேசாக ஈரம் தெரிந்தது.
எனினும் சமாளித்தபடி ,
' ரொம்ப தூரம் போயிட்டு வந்திருக்கீங்க , ரொம்ப டயர்டா இருந்தா முதுகில சாஞ்சிக்கங்கப்பா. வீட்டுக்கு போனதும் எழுப்பறேன் ' என்றேன்.
' ஹஹஹஹா ' என்று சிரித்து தோளை தட்டினார் அந்த இரட்டை நாடிக்காரர்.
' உடம்பு ஏதும் சரியில்லையாப்பா ?? மிட்டாய் போட்டுக்கிறீங்களா ? ' சம்பந்தமில்லாமல் உளறத் துவங்கினேன்.
ஊருக்கு இன்னும் இரண்டு பர்லாங்கே இருக்கும்.
அப்போதெல்லாம் என் முதுகில் தலை சாய்ந்திருந்தார் குமரேசன் அப்பா.
எனக்கோ பேராச்சர்யம். இவ்வளவு பெரிய மனிதர் உறக்கம் தாங்காமல் தூங்கிவிட்டாரென.
அவர் தூக்கம் கலையாதபடி மேடு பள்ளம் பார்த்தபடியே வேகத்தை கணிசமாக குறைத்தேன்.
ஊரு இருப்பதை குறிக்க தெரு விளக்குகள் மின்னத்துவங்கின.
' ஊரு வந்திருச்சுப்பா ' என்றேன் மெதுவாக அவரை எழுப்ப .
அவர் வீட்டு வாசலில் மெதுவாக என் வண்டியை நிறுத்தினேன்.
வீட்டுக்காரருக்காக அவ்விரவிலும் வாசலிலேயே காத்திருந்தார் குமரேசனின் அம்மா.
அம்மா சிரித்தபடியே என்னருகே விசாரிக்க வந்தார்.
' வழியில பாத்தேன். ஆனா அசதியில முதுகில சாஞ்சு தூங்கிட்டார் ' என்று நெளிந்தேன்.
' அப்பா வீடு வந்திருச்சு ' என்றேன் மறுபடியும்.
எழுப்ப வேண்டும் என்பதை நாசூக்காக புரிந்துக்கொண்ட அவரின் மனைவி
' இந்தாங்க ' என்று வேகமாக தட்டி எழுப்ப .................
சரிந்து குமரேசனின் அம்மாவின் மேல் அப்படியே விழுந்தார் கந்தசாமி அப்பா ...
...........................
................................
......................................
உயிரற்ற உடலுடன் வலித்த எண்ணங்களுடன் ஒரு ஜீவனுடன் சிறுது நேரம் பயணித்திருக்கிறோம் என்ற எண்ணம் ஆயிரம் முனைக்கொண்ட கத்தியுடன் என்னைத் துளைத்தெடுத்தது.
கந்தசாமி அப்பா கிடத்தப்பட்டிருந்த வீட்டின் வாயிலேயே அமர்ந்திருந்தேன் , கண்களில் நீர் கசிய . சட்டை நனைய.
' உங்க வீட்டு வாசல்ல கொண்டு போய் விட்டா என்னிய திட்டும்பா உங்க அப்பத்தா ,
அதான் உனக்கெதுக்கு பிரச்சனைன்னு வீட்டு பக்கமே வரதில்ல ' என்று இறுதியாய் அவர் சொன்ன இரகசியம் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
என் நண்பனைப்பத்தி என் நண்பனின் தந்தை கூறியதும் நினைவுகள் வந்துக்கொண்டே இருந்தன.
நண்பனை விட ஒரு நண்பனாய் , வழிகாட்டியாய் , தந்தையாய் இருக்கும் நண்பனின் தந்தையின் முக்கியத்துவத்தை இழந்த பெரும்வலி என்னை சுவற்றோடு சாய்த்திருந்தது.
நண்பன் மேல் அதே வலி ஆத்திரமாய் மாறிக்கொண்டிருந்தது.
குமரேசனின் கைப்பேசிக்கு அதே ஆத்திரத்தில் முயற்சித்துக்கொண்டே இருந்தேன்.
தொடர்பிலில்லை...
அடுத்த நாள் ஊர் பசங்க நேரே போய் இழுத்து வந்தார்கள் குமரேசனை.
பெருந்தூக்க கலக்கத்திலிருந்தான் .
உள்ளே அவன் அம்மாவின் அழு குரல் பெருக்கெடுத்தது.
வீட்டின் உள்ளே போன சிறிது நேரத்தில் கண்கள் கசக்கியபடி என்னருகே கீழே வந்தமர்ந்தான் அவன் .
' என்னடா மாப்ள ஆச்சு அப்பாக்கு ? ' என்றபடி கவலைத் தோய்ந்த முகத்துடன் , கண்கள் சிவக்க தம்மை பற்ற வைத்தான்.
அவனை பார்க்க பார்க்க ஒரு உயிரை காப்பாற்றாத ஆற்றாமையில்
காலுக்கு வாட்டமாய் இருந்த அவன் நெஞ்சில் யோசிக்காமல் எட்டி உதைக்க ,
கற்படிகளில் உருண்டோடி , புழுதி நிரம்பிய வீதியில் அந்த சிகரெட்டோடு விழுந்தான்.
கூட்டம் தூக்க முனையவில்லை.
நானும் அவனைத் தூக்காமல் அருகே சென்று அவனருகில் கிடந்த சிகரெட்டை நசுக்கிப் பொசுக்கினேன் ஆத்திரம் தீர.
நசுக்கப்பட்ட சிகரெட்டில் இறுதியாய் வழிந்துக்கொண்டிருந்த புகையில் ... எப்படியும் அவர் மகனை கண்டிக்க இன்னொரு தோழமை தகப்பன் இருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் அப்போது
நிச்சயமாய் கந்தசாமி அப்பாவின் ஆவி சந்தோசப்பட்டிருக்கும் .
' இனிமே நீ அடிக்கிற கடைசி சிகரெட்டும் இருக்கும் போதையும் இதான்டா ' குரல் உடைந்தும் அழுத்தமாய் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
கூடவே
அதே நம்பிக்கையில் நானும் !!!!!
~ ஜே ரீ-பார்ன்
( நன்றியும் , மகிழ்ச்சியும் : களத்திற்கு உதவிய அண்ணன் THAMBIYINTHAMBI பாபு )
ORIGINAL POST : http://on.fb.me/YybSvd
Comments
Post a Comment